டில்லியில் இண்டி எதிர்க்கட்சி கூட்டணி ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்த திட்டமிட்ட பேரணி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையிலான போராட்டமாக மாறியதாக கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி, தேர்தல் கமிஷன் அலுவலகத்தை நோக்கி இண்டி கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணி சென்ற எம்.பி.க்கள் ஆகாஷ்வாணி பவன் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த நிலையில் அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராகுல், பிரியங்கா, கே.சி. வேணுகோபால், பவன் கெரா ஆகியோர் ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் சென்று ஆலமரத்தடியில் அமர்ந்து தர்ணா நடத்தினர்; அது எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக தகவல்.
இறுதியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அறிவிக்கப்படாத இந்த தர்ணாவால் கூட்டணி பேரணியின் கவனம் ராகுல்-பிரியங்கா போராட்டத்திற்கே சென்றதாகவும், இதனால் பல கூட்டணி தலைவர்கள் அதிருப்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்க அனுமதி கோரிய முடிவையும் காங்கிரஸ் தன்னிச்சையாக எடுத்ததாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையை சமாளிக்கும் முயற்சியாக, டில்லியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் கார்கே கூட்டணி தலைவர்களுக்கு மதிய உணவு விருந்து அளித்ததாகவும், இது இணக்கத்தை மீண்டும் உறுதி செய்யும் முயற்சி என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.





