ஓமன் துணை விமானியால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைத்து வருவதால் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் தெரிவித்தார்.

மேலும், ஐ.அ. எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகம் கேப்டன் மச்சார், அவரது குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதற்கு முன் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையிலும் அவரது உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.