செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்தியத் திட்டங்கள் “சில பணக்காரர்களால்” தடுக்கப்படுகின்றன என்று அதன் தலைவர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். மொபைல் சிக்னல் இல்லாத பகுதிகளிலும் செயற்கைக்கோள் வழியாக இணைய இணைப்பை வழங்குவதே ஸ்டார்லிங்கின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்கிற்கு பூர்வாங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் சில கூடுதல் அனுமதிகள் பெற வேண்டிய நிலையில், அதற்கான பணிகளில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மஸ்க்கின் இந்த கருத்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு பயனர் “இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் தேவை” என நீண்ட பதிவொன்றை பகிர்ந்ததையடுத்து வந்தது. அந்த பதிவில், இந்தியாவின் 11,256 கிராமங்களில் 4,000 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மஸ்க், இந்திய மக்கள்மீது தங்களின் ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள சில பணக்காரர்கள் ஸ்டார்லிங்கை முடக்குகின்றனர் என்று கூறினார். அவர்கள் யார் என்பதை “யூகிக்கலாம்” என்றும், இது இந்திய மக்களுக்கு எதிரான “குற்றம்” என்றும் அவர் தெரிவித்தார்.