தஞ்சாவூர் மற்றும் கோவையில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாத வலையுடன் தொடர்பு இருப்பதாகவும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி (21) என்பவர் கோவையில் தங்கி கூலி வேலை செய்வது போல இருந்து பயங்கரவாத தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அக்டோபர் 1-ஆம் தேதி தஞ்சாவூரில் தங்கி இருந்த யாசர் அப்துல் (44), உமர் முக்தர் (40), ஜாகீர் உசேன் (38), அப்துல் (43), ஷேக் பரீத் (35), சம்சுதீன் (44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய புத்தகங்கள் (ஹிஸ்ப் உத் தஹ்ரீர் உள்ளிட்டவை), மொபைல் போன்கள் மற்றும் பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதே வழக்கில் கர்நாடக மாநிலத்திலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் என்.ஐ.ஏ. விசாரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாசாத் பட்டி (45) என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மூலம் நபர்களை மூளைச்சலவை செய்து வலையமைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி செய்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டியதாகவும், அதன்படி “ஷாசாத் பட்டி நெட்வொர்க்” என்ற பெயரில் சதி நடவடிக்கைகள் நடந்ததாகவும் என்.ஐ.ஏ. கூறியுள்ளது.

இந்த வலையமைப்பு சுதந்திர தின நிகழ்வுகளை சீர்குலைக்கும் வகையில் 14 மாநிலங்களில் சதி திட்டம் தீட்டியதாகவும், அதனுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட அமைப்புகள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதைத் தடுக்க மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவுகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.