தமிழகத்தில் பாரம்பரியமிக்க கோவில் சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட வழக்குகள் மற்றும் சிலை கடத்தல் தொடர்பான முக்கிய வழக்கு கோப்புகள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கக் கோரி, வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது, நாட்டின் கலாசார சொத்துக்கள் திருடப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், வெளிநாடுகளில் இருந்தாலும் அவற்றை மீட்டு வருவது நம் கடமை என்றும் அமர்வு குறிப்பிட்டது. இதற்காக மத்திய அரசின் உதவி தேவைப்பட்டால், தமிழக அரசு தயங்காமல் கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், 2017 முதல் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும், இதுவரை தீர்க்கமான முடிவுகள் அல்லது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் தென்படவில்லை என அமர்வு சுட்டிக்காட்டியது. சிலை திருட்டு வழக்குகள் மற்றும் வழக்கு ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அரசு தாக்கல் செய்யும் அறிக்கை திருப்திகரமாக இல்லாவிட்டால், இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிமன்றமே SIT அமைக்கும் எனவும் அமர்வு எச்சரித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.