ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், திமுக எம்.பி. கனிமொழி கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது என்றும், அவர் விரும்பும் கருத்தை சொல்லலாம் என்றும் தெரிவித்தார்.

மாசுபாடு தொடர்பாக, இது இப்போது தான் வந்ததா, எந்த காலத்தில் உருவானது, யார் கவனிக்கவில்லை, என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார். நாட்டில் உள்ள மாசுபாட்டுக்கு யார் காரணம் என்பதை சுட்டிக்காட்டிய பிறகே தாம் பதில் அளிப்பதாகவும் கூறினார்.

டிவியில் வரும் செய்திகளை வைத்து சட்டம்-ஒழுங்கு குறித்து குற்றம்சாட்டுவது எளிது; ஆனால் நடைமுறையில் ஒவ்வொன்றையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதே முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

இது இன்று மட்டும் அல்ல, தொடர்ந்து நடைபெறும் விஷயங்களை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் எண்ணம் என்றும், அதற்காகவே ‘சிங்கப்பெண் படை’ உருவாக்கப்பட்டதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

பெண்கள் குறித்து கொச்சையாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், ஸ்டாலினிடமும் உதயநிதியிடமும் கேட்டீர்களா என கேள்வி எழுப்பிய அவர், மேடையில் பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக கூறி ‘உங்கள் அண்ணன், அண்ணன் மகன்’ குறித்து கனிமொழியிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்தார்.