திமுக ஆட்சிக் காலங்களில்தான் “நவீன தமிழகம்” கட்டியெழுப்பப்பட்டது என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சி சின்னங்கள் அதற்குச் சாட்சியாக இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட பூந்தமல்லி–போரூர்–வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக குறிப்பிட்டார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், தாம் துணை முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

இரண்டாம் கட்டப் பணிகளை பல்வேறு நேரங்களில் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், இந்த வழித்தடத்தை 2025 இறுதிக்குள் திறக்க திராவிட மாடல் அரசு முயற்சிகள் எடுத்ததாகவும் ஸ்டாலின் கூறினார். ஆனால் சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது சாத்தியமாகவில்லை என தெரிவித்தார்.

மேலும் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், திட்டமிட்டபடி தங்களின் ஆட்சிக் காலத்தில் திறக்க முடியாமல் போனதாக கூறினார். இருப்பினும், சென்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த வழித்தடம் இப்போது பயன்பாட்டுக்கு வர இருப்பது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாக தெரிவித்தார்.

சென்னை மெட்ரோவை தாம் ஆண்டுக்கணக்கில் சுமந்து வளர்த்தெடுத்த “குழந்தை” எனக் குறிப்பிட்டு, அது மேலும் ஒரு படி முன்னேறுவதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார். சென்னை மாநகரில் காணப்படும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் திமுக அரசின் பங்களிப்பு இருப்பதாகவும், திமுக ஆட்சிகளே நவீன தமிழகத்தின் அடித்தளத்தை அமைத்தன என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.