தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் நியமனத்தில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், ஒவ்வொரு காலிப்பணியிடத்தையும் நிரப்புவதற்கு முன் 5 பேர் கொண்ட பெயர் பட்டியல் தயாரிக்க வேண்டுமென நடைமுறை இருப்பதாகவும், ஆனால் இந்த முறையை இந்நியமனங்களில் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நியமிக்கப்பட்ட மூவரின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், இவர்களில் எவரும் இதற்கு முன் தேர்தல் தொடர்பான பணிகளை கையாண்டதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்ட தகுதிகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை எனவும் மனு வலியுறுத்துகிறது.
தேர்வு நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் முன்பே கவலை தெரிவித்திருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டு, பரிசீலனையில் உள்ள பெயர்கள் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.





