தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமலாக்கப் பணியக குற்ற புலனாய்வு துறை (இ.பி.சி.ஐ.டி.) கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தலைமையில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 11,943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17,412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 32 பெண்கள் உட்பட 808 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மண்டல வாரியாகவும் கடத்தல், விற்பனை, பதுக்கல் உள்ளிட்ட செயல்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் தென் மண்டல காவல் துறை 2,769 வழக்குகள் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கூறுகையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் வரை 2,730 வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். கைது எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், வலி நிவாரணம் மற்றும் மனஅழுத்த நிவாரண மாத்திரைகள் தவறான முறையில் போதைக்காக பயன்படுத்தப்படுவது மக்கள் சுகாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது. இணை இயக்குநர் குருபாரதி வெளியிட்ட சுற்றறிக்கையில், சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தி, மருத்துவர் சீட்டின் அடிப்படையிலேயே மருந்துகள் வழங்கப்படுகிறதா, விற்பனை பதிவேடுகள் மற்றும் இருப்புப் பட்டியல் சரியாக உள்ளதா என்பதை நேரில் சரிபார்க்கவும், பெருமளவு கடத்தல் அல்லது சட்டவிரோத விநியோகம் கண்டறியப்பட்டால் காவல் துறையுடன் இணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.