இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக ரயில்வே தொடர்ந்து உள்ளது. நாள்தோறும் சுமார் 9.30 கோடி பயணிகள் ரயில் சேவைகளை பயன்படுத்துவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2023-24 ஆண்டிற்கான பயணிகள் பயன்பாட்டின் அடிப்படையில் ‘டாப் 100’ ரயில் நிலையங்களின் பட்டியலை ரயில் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் நான்கு இடங்களை தானே, கல்யாண், ஹவுரா மற்றும் மும்பை ஆகிய நிலையங்கள் பிடித்துள்ளன.

தமிழகத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் 3.28 கோடி பயணிகளுடன் 8வது இடத்தையும், சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் 3.06 கோடி பயணிகளுடன் 10வது இடத்தையும் பெற்றுள்ளது.

மேலும் இந்தப் பட்டியலில் சென்னை எழும்பூர் 18வது இடத்தில் உள்ளது. கோவை 37வது (1.02 கோடி), பெரம்பூர் 48வது (88 லட்சம்), திருச்சி 57வது (79 லட்சம்) மற்றும் மதுரை 65வது (75 லட்சம்) இடங்களில் இடம்பெற்றுள்ளன.

டாப் 10 பட்டியலில் தானே 9.30 கோடி பயணிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கல்யாண் (8.37 கோடி), ஹவுரா (6.13 கோடி), மும்பை (5.17 கோடி), சீல்டா (5.14 கோடி), பன்வேல் (4.70 கோடி), புதுடில்லி (3.97 கோடி), தாம்பரம் (3.28 கோடி), தாதர் (3.23 கோடி) மற்றும் சென்னை எம்ஜிஆர் மத்தியம் (3.06 கோடி) இடம்பெற்றுள்ளன.