தமிழகத்தில் தனியார் ‘அக்ரிகேட்டர்’ செயலிகள் மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவையை ஒழுங்குபடுத்த, 6 மாதங்களுக்குள் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தனியான சட்ட விதிமுறைகள் இல்லை என்றும், தனியார் நிறுவன செயலிகள் மூலமே சேவை நடைபெறுகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. சேவை செயல்பட அரசு அனுமதித்துள்ள நிலையில், டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது முரண்பாடாக இருப்பதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
பயணியர் பாதுகாப்பு, கட்டண நிர்ணயம், காப்பீடு, புகார் தீர்வு உள்ளிட்ட அம்சங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளதாக கூறிய மனுதாரர், தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகள் உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில், தென்மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 6 மாத அவகாசம் தேவை எனவும் அரசு கூறியது.
நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, 6 மாதங்களில் பைக் டாக்சிக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்தது.





