தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது, சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வதுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) இணையதளத்தில் அக்.31க்குள் விவரங்களை பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்.5 அன்று தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்ட உத்தரவின்படி, அசையும் மற்றும் அசையா சொத்துகள், சேமிப்புகள், கடன்கள் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வேறு நபரின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் இருந்தால் அவற்றையும் குறிப்பிடுவதுடன், அந்த நபருக்கும் ஊழியருக்கும் உள்ள உறவுமுறையும் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்த ஊழியர்களின் பெயர்களே பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும் என அரசு தெரிவித்துள்ளது. தாக்கல் செய்யாதவர்கள் அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறியதாக கருதப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுபோன்ற உத்தரவு இருந்தாலும் அது முறையாக அமல்படுத்தப்படவில்லை என செய்தி குறிப்பிடுகிறது. இந்நிலையில், பினாமி பெயரில் உள்ள சொத்துகள் உட்பட அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே கவலை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.