தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், நான்கு மாதங்களாக செயல்பட்டு வரும் தவெக தலைமையிலான கூட்டணி அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் தவெக பெரும்பான்மை பெறாத நிலையில், அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுக மற்றும் அதிமுக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்ததாக சித்தரிக்கவும் முயற்சிகள் நடந்தன.

ஆனால், எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும், விஜய் தலைமையிலான கூட்டணி அரசின் செயல்பாடு குறித்து மக்களிடம் குறிப்பிடத்தக்க அதிருப்தி இல்லை என்பதையும் இந்த முடிவுகள் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது மற்றும் பின்னர் அவர்களுக்கே மீண்டும் சீட் வழங்கி போட்டியிட வைத்தது போன்ற விவகாரங்கள் குறித்த விமர்சனங்களையும், சமூக வலைதளங்களில் பரவிய எதிர்மறை பிரசாரங்களையும் வாக்காளர்கள் பொருட்படுத்தவில்லை என்பதாகவும் இந்த முடிவுகள் அமைந்துள்ளன.