புதுடில்லி: ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் தொழிற்துறையினரை கைது செய்ய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை நீக்க, ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நடைபெற்ற 57வது கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
‘ஜி.எஸ்.டி. 2.0’ன் இரண்டாம் கட்டமாக பார்க்கப்படும் இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. விகிதங்களில் மாற்றம் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட பெரும்பாலான சீர்திருத்தங்கள் 2027 ஏப். 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட மாற்றங்களில், வழக்கு தொடர்வதற்கான வரித்தொகை வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தண்டனை விதி நீக்கப்பட்டதால், அபராதம், சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிப்பது நீதிமன்றத்தின் முடிவாக இருக்கும். பொது அபராதம் ரூ.25,000 இலிருந்து ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.10,000-க்கு குறைவான தொகைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படாது; இதுபோன்ற நிலுவை நோட்டீஸ்களும் திரும்ப பெறப்படும்.
ரிட்டர்ன் தாக்கல் தாமதம்/தவறுகள் அல்லது வரி செலுத்துவதில் தாமதம் போன்ற வழக்கமான சூழ்நிலைகளில், கூடுதல் தண்டனைகளுக்கு பதிலாக நிலுவை வரி வசூல், வட்டி மற்றும் சம்பந்தப்பட்ட அளவிலான அபராதம் மட்டும் விதிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளீட்டு வரி வரவு (ITC) தொடர்பாக, ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு, தொலைத்தொடர்பு கோபுரங்கள், இலவச மாதிரிகள், சட்டப்படி அழிக்க வேண்டிய காலாவதியான பொருட்கள் ஆகியவற்றில் செலுத்தப்படும் ஜி.எஸ்.டி.-க்கு ITC பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது; குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் வெளிப்புற கேட்டரிங் சேவைகளுக்கும் சலுகை விரிவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்படாதவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்கும் ரூ.5 கோடி வரை மொத்த வருவாய் கொண்ட வரி செலுத்துவோருக்கு காலாண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தி ஆண்டுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சிறிய இ-காமர்ஸ் விற்பனையாளர்களுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுவதுடன், ஜி.எஸ்.டி. வழக்குகளுக்கான பொதுவான நடைமுறைகள் (நோட்டீஸ், நோட்டீசுக்கு முந்தைய தகவல், மோசடி குற்றச்சாட்டு, விசாரணை, உத்தரவு) உருவாக்கப்படும். ஒரே வகை சேவைகளை வாங்கி மீண்டும் விற்கும் சில சேவைகளுக்கு ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்றும், விகிதம் தொடர்பான விவகாரங்கள் இனி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தனிப்பட்ட கூட்டத்தில் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது.





