தமிழகத்தில் புதன்கிழமை (அக்.9) சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அதனுடன் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், மேலும் நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (அக்.10) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.