புதுடில்லி: நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்டத்தில் இருந்து சில இந்திய நிறுவனங்களை அமெரிக்கா சஸ்பெண்ட் செய்ததை ஏற்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சக பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
PERM நடைமுறை ஹெச்1பி விசா முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், ஏற்கனவே உள்ள ஹெச்1பி விசா கால அவகாசத்தையோ அல்லது தற்போதைய விசா வைத்திருப்பவர்களையோ இது நேரடியாக பாதிக்காது என்றும் அவர் விளக்கினார். ஆனால், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய தகுதியான ஊழியர்களின் கிரீன் கார்டு செயல்முறையில் சில தாக்கங்கள் ஏற்படலாம் என்றார்.
இருநாடுகளுக்கிடையே திறமையான வல்லுநர்கள் பணியாற்றுவது அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு பொருளாதாரங்களுக்கும் மதிப்பு சேர்க்கும் என்றும், இந்தியர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும் போது புதுமை, ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளில் அமெரிக்க நிறுவனங்கள் பலனடைகின்றன என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கை இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இல்லை என்றும், இந்த விவகாரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். மேலும், அமெரிக்க துணை அதிபர் கூறியதாக குறிப்பிடப்படும் கருத்துகள் தேவையற்றவை என்றும், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இந்திய வல்லுநர்கள் அளிக்கும் பங்களிப்பை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
அமெரிக்காவின் வரலாறே பல தலைமுறை புலம்பெயர்ந்தவர்களால் வடிவமைக்கப்பட்டதாகவும், அவர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்புகள் அந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.





