சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். முதல்வர் விஜயின் நான்கு மாத நல்லாட்சிக்கு மக்கள் அளித்த வெற்றிதான் இது எனக் கூறிய அவர், மாற்றம் வேண்டி மக்கள் வாக்களித்ததாகவும், மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மாற்றத்துக்கான அரசாகவும் நல்லாட்சியாகவும் தொடர்வோம் என்றார்.

இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டதாகவும், ஒருபக்கம் இபிஎஸ் ஸ்டாலினை புகழ்ந்தார்; மறுபக்கம் ஸ்டாலின் இபிஎஸை புகழ்ந்தார் எனவும் அவர் குற்றம்சாட்டினார். இதை மக்கள் புரிந்துகொண்டதால், வரும் தேர்தல்களில் தவெக வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.

மேலும், இபிஎஸ் தலைமையில் அதிமுக பலவீனமடைந்ததாகவும், இடைத்தேர்தலில் பெரும் தொகை செலவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தல் எப்போது நடந்தாலும் விஜய்க்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், மக்கள் வாக்கின் மூலம் சிறந்த ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபித்துள்ளனர் என்றார். தாராபுரம், மதுராந்தகத்தில் மாபெரும் வெற்றி கிடைத்ததாகக் குறிப்பிட்டு, தமிழகத்தில் இனி எந்த தேர்தல் வந்தாலும் தவெகதான் வெற்றி பெறும் என்றும், விஜயை மக்கள் நம்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.