வாஷிங்டன்: செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவையைத் தொடங்க முயன்றாலும், இதுவரை தேவையான அனுமதி கிடைக்கவில்லை.
எக்ஸ் சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தை காக்க சில பணக்காரர்கள் ஸ்டார்லிங்கை முடக்க முயல்கிறார்கள் என்றும், அது இந்திய மக்களுக்கு எதிரானது என்றும் கூறினார்.
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைக்கான ஒழுங்குமுறை சட்டங்கள் பாரபட்சமின்றி, நியாயமான முறையில் நடைமுறையில் உள்ளதாகவும், மஸ்கின் குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகவும் தெரிவித்தது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, மஸ்க்கிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதிவானது.
ஒரு கருத்துக்கு பதிலளித்த மஸ்க், ஸ்டார்லிங்கிற்கு 165 நாடுகள் லைசென்ஸ் வழங்கியுள்ளன என்றும், இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் வழிமுறைகளை ஐந்து ஆண்டுகளாக பின்பற்றுகிறோம் என்றும் கூறி, இன்னும் அனுமதி வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் “இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானியா” என குறிப்பிட்டதாகவும், அந்த பதிவு புதிய சர்ச்சையை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.





