ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் செந்தில் மணிராஜன் (45), உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழு, 2025–26 ஆண்டுக்கான உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலை அக். 7 அன்று வெளியிட்டது. அறிவியல் துறைகளில் இருந்து 22 ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்ற அந்த பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த செந்தில் மணிராஜனும் தேர்வாகியுள்ளார்.
இயற்பியல் துறையில் பணியாற்றும் அவர், ‘ஆப்டிகல் ஃபைபர்’ வழியாக பல்வேறு வகை சென்சார்கள் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். உலகின் முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு அவரது குவாண்டம் இயற்பியல் புத்தகம் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்களை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ‘பார்மலின்’ என்ற வேதிப்பொருளை கண்டறியும் சென்சாரையும் அவர் வடிவமைத்துள்ளார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் அவர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.





