மும்பை: நாட்டின் நகர்ப்புற குடும்பங்களில் பாதிக்கு மேற்பட்டோர் கடந்த ஓராண்டில் தங்களின் பொருளாதார நிலை மோசமடைந்ததாக தெரிவித்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வு குறித்த கவலைகள் மக்களின் நம்பிக்கையை பாதித்துள்ளதாகவும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.
ஆர்பிஐ நடத்திய ‘நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு’க்காக கடந்த மாதம் நாடு முழுவதும் 19 முக்கிய நகரங்களில் இருந்து 6,054 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது.
மொத்தமாக 54.5% பேர் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக கூறினர். இது ஜூலை மாதத்தில் 50.5% ஆகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில் 40.9% ஆகவும் இருந்தது. அதே நேரத்தில், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறியோர் 25.3% ஆக இருந்தனர்; ஜூலை மாதத்தில் இது 27.1% ஆக பதிவானது.
தற்போதைய பொருளாதார உணர்வை காட்டும் ‘கரண்ட் சிட்யூயேஷன் இன்டெக்ஸ்’ (CSI) ஜூலை மாதத்தின் 88.3 புள்ளிகளில் இருந்து 87.9 ஆக குறைந்துள்ளது. அடுத்த ஓராண்டில் நிலைமை மேலும் மோசமடையும் என 38.3% பேர் அச்சம் தெரிவித்ததால், எதிர்கால எதிர்பார்ப்பு குறியீடு 115.3ல் இருந்து 113.5 புள்ளிகளாக சரிந்துள்ளது.
உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஆடம்பர மற்றும் விருப்பம் சார்ந்த செலவுகளை நகர்ப்புற மக்கள் குறைத்துள்ளதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் தொடர்ந்தும் முக்கிய கவலைகளாக இருப்பதாகவும் பதிலளித்தோர் தெரிவித்துள்ளனர்.





