புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் டில்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள் பகிரங்க கடிதம் வெளியிட்டு, நாட்டின் அரசியல் சாசன அமைப்புகளை சீர்குலைக்கும் முயற்சி நடக்கிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் கமிஷன், நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளை குறிவைத்து உள்நாட்டிலுள்ள சில அமைப்புகள் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்றும், இது அரசியலமைப்புக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த விவகாரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) உள்ளிட்ட பல விஷயங்களில் தலைமை தேர்தல் கமிஷனர் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், சக தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பலமுறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து மேலும் பரபரப்பானது. இதை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று நாட்களாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு தேர்தல் கமிஷன் தரவுகளுடன் விளக்கம் அளித்து, மூன்று கட்டங்களாக நடந்த SIR பணியில் 95.40 கோடி வாக்காளர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், உயிரிழப்பு, இடம்பெயர்வு போன்ற காரணங்களால் 13.39 கோடி பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதத்தில், ஆதாரமின்றி ‘ஓட்டு திருட்டு’ போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், தேர்தல் கமிஷன் உறுதிமொழி கோரும்போது யாரும் முன்வருவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஜனநாயகத்தில் விமர்சனத்திற்கு இடம் இருந்தாலும், அரசியல் சாசன அமைப்புகளை அவமதிக்கும் வகையில் அவதூறு பரப்புவது ஆபத்தானது; தேர்தல் செயல்முறையின் மீது தொடர்ச்சியாக அவநம்பிக்கை விதைப்பது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.





