சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள், ரியாத் மற்றும் அபா விமான நிலையங்களை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தகவலின்படி, ஹவுதி பயங்கரவாதிகள் இரு விமான நிலையங்களையும் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் தாக்குதல் தொடரலாம் எனவும் அவர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரியாத் விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், பயணிகள் விமான நிலையம் செல்லும்முன் தங்களது விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகவல் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை அக்டோபர் 10 வரை ரியாத் செல்லும் விமானங்களை இயக்கமாட்டோம் என அறிவித்துள்ளன.

ரியாத் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பாதிக்கப்படும் பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திருப்பி வழங்கப்படும் எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.