புதுடில்லி: ரூ.2,000-ஐ மீறும் யு.பி.ஐ. வழி வணிக பரிவர்த்தனைகளுக்கு விதிக்க திட்டமிடப்பட்ட கட்டணத்தை, பண்டிகை கால செலவினம் மற்றும் விற்பனை பாதிக்கக்கூடும் என்ற கவலையால் ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யு.பி.ஐ. அமைப்பை இயக்க ஆண்டுக்கு சுமார் ரூ.21,000 கோடி செலவாகும் நிலையில், அந்தச் செலவை யார் ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணத்தை வணிகர்களிடமிருந்து வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த புதிய கட்டண முறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனம் (NPCI) அறிவித்திருந்தது. திட்டத்தின் படி நுகர்வோரிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கப்படாது; வணிகர்களே அதை ஏற்க வேண்டும்.
ஆனால், அந்தச் செலவை வணிகர்கள் வாடிக்கையாளர்கள்மீது சுமத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வருவதுடன், அதனைத் தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கலும் வருவதால், இந்த காலகட்ட விற்பனையை வணிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டில் 50 கோடிக்கும் அதிகமானோர் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், புதிய கட்டண முறை பண்டிகை கால வாங்குதலை குறைக்கக்கூடும் என பலர் கருதுகின்றனர். இதனால், எம்.டி.ஆர். போன்ற இந்தக் கட்டண நடைமுறையை சில மாதங்களுக்கு ஒத்திவைக்கலாமா என்பதை அரசு ஆய்வு செய்து வருவதாகவும், புதிய முறைக்கு மாற வணிகர்களுக்கு அவகாசம் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





