வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற பயன்படுத்தப்படும் PERM (Permanent Labor Certification) திட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் மற்றும் காக்னிசன்ட் ஆகிய நிறுவனங்களை அமெரிக்க தொழிலாளர் துறை இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PERM என்பது, கிரீன் கார்டுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முன், குறிப்பிட்ட பணிக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள அமெரிக்கத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை நிறுவனங்கள் பெறும் நடைமுறை. இதற்காக நிறுவனங்கள் அமெரிக்க தொழிலாளர் துறையை அணுக வேண்டும்.

இந்த இடைநீக்கம், அமெரிக்காவில் இந்திய ஐடி நிபுணர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடியை உருவாக்கலாம்; நிரந்தர குடியுரிமை பெற விரும்பும் ஊழியர்களுக்கும் தாக்கம் ஏற்படலாம். அதே நேரத்தில், எச்1பி விசாக்களை ரத்து செய்வதோ அல்லது அந்த விசா வகையில் பணியமர்த்துவதைத் தடுக்கவோ இல்லை. ஆனால் PERM கீழ் புதிய விண்ணப்பங்களை தாக்கல் செய்வதும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் நிறுத்திவைக்கப்படும் என கூறப்படுகிறது.

புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில், இந்திய ஐடி நிறுவனங்களுடன் மைக்ரோசாப்ட், அடோப் மற்றும் கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-ல் மைக்ரோசாப்ட் 6,000-க்கும் மேற்பட்ட எச்1பி விசாக்களையும் 3,632 PERM விண்ணப்பங்களையும் பெற்றதாகவும், அதே ஆண்டில் 6,000 அமெரிக்க ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் குற்றம்சாட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.