உலகளாவிய இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான WWF வெளியிட்ட புதிய அறிக்கை, கடந்த ஐந்து தசாப்தங்களில் உலகின் முதுகெலும்புள்ள விலங்கினங்களில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வெளியான லிவிங் பிளானட் அறிக்கை – 2026ப்படி 1970 முதல் 2022 வரை மொத்தமாக 73% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த ஆய்வில் பாலூட்டிகள், மீன்கள், பறவைகள் உள்ளிட்ட முதுகெலும்புள்ள விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடமாட்டத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு போக்குகள் கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நன்னீரில் வாழும் உயிரினங்களின் நிலை மிக மோசமாக இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அறிக்கையின் கணக்கீட்டுப்படி நன்னீர் உயிரினங்கள் 85% வரை குறைந்துள்ளன. தரைவாழ் விலங்கினங்களில் 69% சரிவும், கடல்வாழ் உயிரினங்களில் 59% சரிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிகள் அழிப்பு, இயற்கை வளங்களை அளவுக்கு மீறி சுரண்டுதல், காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு ஆகியவை இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவுக்கான WWF தலைமை அதிகாரி ரவி சிங், புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுத்தது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் இயற்கையை மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.