கோலாலம்பூர்: மலேஷிய பார்லிமென்டில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய காட்சி இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும் போது, “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” என்ற குறளை அவர் மேற்கோள் காட்டினார். ஒரு சிறந்த நாட்டிற்கு தேவையான தகுதிகளை விளக்குவதற்காக இதை அவர் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையின் காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பும் அன்வர் இப்ராஹிம் பார்லிமென்டில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். 2023 பட்ஜெட் உரையில் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்ற குறளை அவர் கூறியிருந்தார்.
அதேபோல் 2024 பட்ஜெட் உரையில் “உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்ற குறளை மேற்கோள் காட்டி அதன் பொருளையும் விளக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.





