வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கக் கோரும் ‘படிவம் 7’ மனுக்களை ஒரே நபர் மொத்தமாகத் தாக்கல் செய்வதைத் தடுக்கும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன் புதிய உச்சவரம்பை அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது, தேவையற்ற அல்லது தவறான காரணங்களுக்காக பிறரது பெயர்களை நீக்கக் கோரி ஒரே நபர் பல மனுக்கள் அளிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் களப்பணியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கும் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுவதாகக் கமிஷன் குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிற்கும் பொருந்தும் புதிய வழிகாட்டுதலின்படி, உரிமைகோரல்–மறுப்பு காலகட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 10 படிவங்கள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஆண்டு முழுவதும் நடைபெறும் தொடர் திருத்தத்தின் போது, ஒருவருக்கு மாதத்திற்கு 5 படிவங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மேலும் மனுதாரரின் கையொப்பம் முறையாக இருக்க வேண்டும் என்றும், சீல் அல்லது முத்திரை வைத்து கையொப்பமிடுவதை ஏற்க முடியாது என்றும் கமிஷன் தெரிவித்துள்ளது. மனுக்கள் மீது தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய விசாரணை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொய்யான அல்லது தவறான ஆட்சேபனைகளை உள்நோக்கத்துடன் முன்வைத்தது தெரிய வந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன் பிரிவு 31ன் கீழ் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.