தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் (TNAU) வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், 2026-ம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை குறித்து மாவட்ட அளவிலான கணிப்பை வெளியிட்டு, தற்போது நிலவும் ‘எல் நினோ’ சூழ்நிலை காரணமாக மழை பரவலில் பெரிய வேறுபாடுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
அக். முதல் டிச. வரை தமிழகத்தில் சுமார் 468 மி.மீ. வடகிழக்கு பருவமழை கிடைக்கும் என மையம் கணித்துள்ளது. இது நீண்டகால சராசரி 464 மி.மீ.க்கு நெருக்கமானதால், மாநில அளவில் மழையளவு ‘சராசரிக்குச் சமம்’ என்ற நிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 1 முதல் செப். 22 வரை 254 மி.மீ. மழை மட்டுமே கிடைத்ததாகவும், இது நீண்டகால சராசரி 292 மி.மீ.யை விட சுமார் 13% குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டு மொத்த மழையில் சுமார் 50% பங்கு வகிக்கும் வடகிழக்கு பருவமழை நல்ல அளவில் கிடைத்தால், இந்த பற்றாக்குறை ஓரளவு சரியாகி, நீர்நிலைகளின் நீர் இருப்பும் நிலத்தடி நீர் மட்டமும் மேம்படும் வாய்ப்பு இருப்பதாக மையம் தெரிவித்தது.
அதே நேரத்தில், எல் நினோ காரணமாக கடலோர மாவட்டங்களில் புயல் சார்ந்த தொடர் மழையும், உள் மாவட்டங்களில் தொடர்ச்சியான வறண்ட நிலையும் உருவாகலாம் என கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக மழை கிடைக்கும் காலங்களில் கூடுதல் மழைநீரை பண்ணை குட்டைகளில் சேமித்து, வறட்சி காலத்தில் பாசனத்துக்கு பயன்படுத்த விவசாயிகள் திட்டமிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மையத் தலைவர் சத்தியமூர்த்தி கூறுகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் மழையளவு கணிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை அக். இரண்டாம் வாரத்தில் தொடங்கும் எனவும் தெரிவித்தார். கோவையைச் சுற்றிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், குறிப்பாக கோவை குற்றாலம் மற்றும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும், அக். மூன்றாம் வாரத்தில் பருவமழை முழுமையாக நிலைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.





