வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், முகேஷ் அம்பானியை இந்தியாவின் “நிஜ பாஸ்” என சுட்டிக்காட்டும் வகையில் “பிரதமர் அம்பானி” என்று குறிப்பிடும் கிண்டல் பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையான ஸ்டார்லிங்கை கொண்டு வர மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் இதுவரை அந்த சேவைக்கு அனுமதி கிடைக்கவில்லை.

சில தினங்களுக்கு முன், இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொடங்குவதை சில பணக்காரர்கள் முடக்குகிறார்கள் என்று பெயர் குறிப்பிடாமல் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது வெளியான பதிவும் அதே பின்னணியில் அம்பானியை குறிவைப்பதாக பார்க்கப்படுகிறது.

அந்த பதிவில், “இந்தியாவின் நிஜமான முதலாளி நீங்கள்தான்” என்பதை உணராமல் போனதற்கு மன்னிப்பு கேட்பது போல எழுதிக் கொண்டு, மக்கள் மத்தியில் ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள விரும்புவீர்கள் என்றும் கிண்டலாக குறிப்பிடுகிறார். பின்னர், ஸ்டார்லிங்குடன் போட்டியிட அனுமதிப்பீர்களா என கேட்கிறார்.

மேலும், இந்தியாவின் பல கிராமப்புறங்களில் இன்னும் இணைய வசதி இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், சிறு வணிகர்கள் உலக சந்தையை அணுக முடியாமல் இருப்பதாகவும் கூறுகிறார். ஸ்டார்லிங்க் வந்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் அவர் பதிவில் தெரிவிக்கிறார்.