தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் பயனை பெற புதிதாகப் பிறந்த குழந்தையையும் கட்டாயமாக நேரில் கொண்டு வரச் சொல்லி அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்கும் நோக்கில், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல்வர் விஜய் செப்டம்பர் 28 அன்று திட்டத்தை தொடங்கி வைத்தாலும், ஜூன் 22 முதல் பிறந்த அனைத்து குழந்தைகளும் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திட்டத்தின் படி, 1.07 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட வேண்டும்; தினசரி சுமார் 100 மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மோதிரம் பெறும் நடைமுறையால் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், மோதிரம் பெற குழந்தையை கட்டாயம் தூக்கி வர வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் 30–40 கி.மீ. தூரம் இருப்பதால், வெயிலில் பஸ்சில் குழந்தையுடன் வர வேண்டியதுடன், வந்தபின் நீண்ட நேரம் காத்திருக்கவும் நேரிடுகிறது; குழந்தைக்கு பால் கொடுக்க கூட வசதி இல்லை என தெரிவித்தனர்.
எனவே, அரசு மருத்துவமனையில் பிரசவித்ததற்கான பதிவுகள் மற்றும் தகுதி ஆவணங்களை சமர்ப்பித்தாலே மோதிரம் வழங்கும் முறையை அரசு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள், மோதிரம் வழங்குவது வீடியோ பதிவு செய்யப்படுவதால் குழந்தையும் உடன் இருக்க வேண்டும் என்றும், சில மாதங்களுக்கு மட்டும் இச்சிரமம் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.





