வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் வழியாக இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த ஐஜிஎஸ்டி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இவ்வகை இறக்குமதிக்கு இனி 3% வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய வருவாய் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், வங்கிகள் வழியாக இறக்குமதி செய்யப்படும் விலைமதிப்புள்ள உலோகங்களுக்கு இருந்த வரிவிலக்கு கடந்த மார்ச் 31-இல் முடிவடைந்ததாகவும், அதை அரசு மேலும் நீட்டிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதன் மூலம் தங்கம், வெள்ளி இறக்குமதிகள் ஒரே மாதிரியான வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

வரி சலுகை காரணமாக குறிப்பிட்ட ஒரு இறக்குமதி வழிமுறை மட்டும் முன்னுரிமை பெறுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஏப். 1 முதல் இது அமலுக்கு வந்ததாகவும் அவர் கூறினார். இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், ஏப். 17-இல் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்ககம் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களின் புதிய பட்டியலை வெளியிட்டிருந்தாலும், வரிவிலக்கு தொடர்பான அரசாணை புதுப்பிக்கப்படவில்லை என செய்தியில் கூறப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் வழியாக தங்கம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 2017-இல் தங்கத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த விலக்கு, பின்னர் வெள்ளி மற்றும் பிளாட்டினத்துக்கும் நீட்டிக்கப்பட்டது.