இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களை “ஒப்பந்த அடிமைகள்” என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்திய நிபுணர்கள் முக்கிய பங்களிப்பு வழங்குவதை இத்தகைய கருத்துகள் புறக்கணிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இந்த விவகாரம், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெற பயன்படும் ‘பெர்ம்’ (PERM) தொழிலாளர் சான்றிதழ் நடைமுறையைச் சுற்றியுள்ள கண்காணிப்பின் பின்னணியில் எழுந்துள்ளது. இந்த நடைமுறையில், வெளிநாட்டு ஊழியரை நியமிப்பதால் அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியம் அல்லது வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாது என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
‘பெர்ம்’ திட்டத்தை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதில் முறைகேடுகள் நடந்ததாக அமெரிக்க அரசு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான காக்னிசன்ட், இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ, எச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்களும், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் ‘பெர்ம்’ நடைமுறையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கையை குறிப்பிட்டு வான்ஸ், மைக்ரோசாப்ட் கடந்த ஆண்டு 6,000 அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோதும் 6,300 எச்-1.பி. விசாக்களையும் 3,000 கிரீன் கார்டுகளையும் பயன்படுத்தியதாக கூறினார்; மேலும் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்கர்களைவிட ஆண்டுக்கு சுமார் ரூ.45 லட்சம் குறைவாக சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய நிபுணர்கள் உயர்கல்வி பெற்ற திறமையாளர்கள் என்றும், குடியேறிகளின் உழைப்பு, முதலீடு, புதுமைகளால் அமெரிக்க வரலாறு உருவானதை மறக்கக் கூடாது என்றும் கூறி, காலனித்துவ பின்னணி கொண்ட சொற்கள் மிகவும் புண்படுத்துவதாக சுட்டிக்காட்டியது.





