டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு), 11 மாணவியர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தொடர்ந்து, பேராசிரியரும் காங்கிரஸ் லோக்சபா எம்.பி.யுமான அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாமை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

சமூக அறிவியல் பள்ளியின் கீழ் செயல்படும் சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் அவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் லோக்சபா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாகவும் உள்ளார்.

கடந்த மே மாதம் பல்கலை உள்விவகாரக் குழுவிடம் (ICC) அளிக்கப்பட்ட புகார்களில், வகுப்பின்போது தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பேசியதாகவும், சில மாணவியரை இரவில் வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் தருவதாக ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் சீரழித்ததாகவும் மாணவியர் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், பல்கலை வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தேசிய மகளிர் கமிஷன் பல்கலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை ஏன் நடத்தப்படவில்லை என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களுடன் அறிக்கை தர வேண்டும் என்றும் கேட்டது.

அதன் பின்னர் ICC விசாரணை நடத்தி, புகார் அளித்த மாணவியர் மட்டுமல்லாமல் சமூக அறிவியல் பள்ளியின் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களிடமும் வாக்குமூலம் பெற்றது. குற்றச்சாட்டு உறுதியானதாகக் கூறி கடுமையான நடவடிக்கையை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில், முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக குறிப்பிட்டு அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.