பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், நாட்டை ஸ்திரமற்றதாக்கும் வகையில் “மிகவும் ஆபத்தான சூழல்” உருவாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்று சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

140 கோடி மக்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து, இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பங்களித்து வரும் நிலையில், நாட்டைச் சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்றும், இதைச் செய்வது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அராஜகத்தை உருவாக்கும் முயற்சிகளில் இரண்டு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். ஒன்று ராகுல் காந்தி தலைமையிலான ‘இண்டி’ (INDI) கூட்டணியுடன் தொடர்புடைய குழு; மற்றொன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் சகாக்களுடன் தொடர்புடைய குழு என அவர் குறிப்பிட்டார். ஸ்திரமற்ற தன்மையை அதிகமாக யார் உருவாக்க முடியும் என்ற “அராஜகப் போட்டி” வெற்றிபெறாது என்றும், மக்களுக்கு அவர்களின் உள்நோக்கங்கள் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் ஏற்கனவே இவர்களை நிராகரித்துவிட்டதாக கூறிய நிதின் நபின், அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் அல்லது அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், நாட்டைச் சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், அரசியல் நோக்கங்களுக்காகவும் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரிலும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.