லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வர உள்ளார். மாணவர்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
‘மாணவர்கள் குரல்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் மாணவர்களை சந்தித்து வரும் ராகுல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நேரடியாகக் கேட்டு அறிந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
திட்டமிட்டபடி, அவர் டில்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டு, பகல் 12:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின்னர் அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மாலை 5:00 மணிக்கு தீவுத்திடலில் நடைபெறும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் டில்லி திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





