சென்னை: இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவை “துரோகத்திற்கு கிடைத்த இடைக்கால வெற்றி” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சினிமா கவர்ச்சி பலத்தை நம்பி அரசியல் களத்தில் குதித்து, பெரும்பான்மை இல்லாத நிலையிலும் “குதிரை பேரங்கள்” மூலம் முதல்வராக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார். இடைத்தேர்தலிலும் ‘ரீல்ஸ்’ மற்றும் விளம்பரமே கைகொடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே பிரசாரம் நடந்ததாகவும் கூறினார்.
பிரசாரத்தின் போது டீ குடித்தல், டிராக்டர் ஓட்டுதல், முருங்கைக்காய் பறித்தல் உள்ளிட்ட காட்சிகளுடன் தெருத்தெருவாகச் சென்றதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். பதவியில் இருக்கும் முதல்வர் இவ்வாறு நேரடியாக தெருக்களில் பிரசாரம் செய்வது அபூர்வம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மகளிருக்கு கட்டணமில்லா பயண விரிவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’, ‘அண்ணன் சீர்’ போன்ற திட்டங்கள் வெளியிடப்பட்டதாக அவர் கூறினார். பல்வேறு விதிமீறல்கள் மூலம் இந்த முடிவு பெற்றதாகவும், “பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கி விட்டது” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.





