வாஷிங்டன்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மீது அமெரிக்கா மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. முன்னாள் ஐசிசி நீதிபதியான நவநீதம் பிள்ளைக்கு நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தி ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்ட நீதிமன்றத்துக்கு எதிரான டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்கக் குடிமக்களை ஐசிசி விசாரிப்பதை அதிபர் டிரம்ப் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் எனக் கூறி, அதனாலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ரூபியோ வெளியிட்ட அறிக்கையின்படி, ஐசிசியுடன் தொடர்புடைய அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்படும். நீதிமன்றத்தின் நிதி ஆதாரங்களை துண்டித்து, அதன் செயல்பாடுகளையே முடக்கும் வகையில் இந்தத் தடை அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பின்னணியாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக ஐசிசி கைது வாரண்டுகள் பிறப்பித்தது, மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரித்தது போன்ற விவகாரங்கள் குறிப்பிடப்படுகின்றன. முன்பு சில நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் மீது மட்டும் தடை இருந்த நிலையில், இப்போது முழு நீதிமன்ற அமைப்பையே குறிவைத்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஐசிசியில் உறுப்பினர்கள் அல்லாதபோதும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வம்சாவளியை சேர்ந்த பிரபல சட்ட வல்லுநரும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நவநீதம் பிள்ளைக்கு நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பேசிய அவர், சர்வதேச குற்றவியல் நீதியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் பல ஆண்டுகளாக ஏற்பட்ட மனித உரிமை முன்னேற்றங்களை சீர்குலைத்து, சட்டத்தை விட அதிகாரமே மேலோங்கும் நிலைக்கு உலகை தள்ளிவிடும் என எச்சரித்துள்ளார்.





