சென்னையில் நடந்த நிகழ்ச்சி

சென்னையில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய முதல்வர் விஜய், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் அதன் பலன் மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்றார். பிரதமரை வரவேற்ற அவர், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்ததற்காகவும் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சி முன்னுரிமைகள்

தமிழகத்தின் பண்பாட்டு மரபு மற்றும் தமிழ் மொழியின் சிறப்பை குறிப்பிட்ட முதல்வர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மீனவர் நலன் உள்ளிட்ட துறைகளில் அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். குழந்தைகள், பெண்கள், திருநர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார இலக்கு மற்றும் வளர்ச்சி பரவல்

2036ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி வேளாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப திட்டங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் கூறினார். புதுமை கண்டுபிடிப்பு, முதலீடு, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், சென்னையைத் தாண்டி அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் முன்னிலையில் முன்வைத்த கோரிக்கைகள்

முதல்வர் விஜய் முன்வைத்த கோரிக்கைகளில், 65 கிமீ நீளமுள்ள சென்னை மெட்ரோ மூன்றாம் கட்டத்திற்கு விரைவில் ஒப்புதல், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை மறுபரிசீலனை, ஒசூர்–கர்நாடகாவின் பொம்மசான்ட்ரா இடையிலான மெட்ரோ இணைப்புக்கு அனுமதி ஆகியவை இடம்பெற்றன. மேலும் சில தேசிய நெடுஞ்சாலைகளை ஆறுவழிச்சாலையாக உயர்த்துதல், கோதாவரி–காவிரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்தல், சர்வ சிக்சா அபியான் கீழ் ரூ.5,110 கோடி உடனடியாக விடுவித்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகளையும் அவர் தெரிவித்தார்.