சென்னை: சமீபத்திய இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற குறைந்த ஓட்டுகள், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க. அரசுக்கு வெளிப்புற ஆதரவு அளித்து வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. கட்சி கட்டமைப்பு வலுவாகவும், தொழிற்சங்க ஆதரவும் இருப்பதால் இரு தொகுதிகளிலும் குறைந்தது 3% ஓட்டுகள் கிடைக்கும் என தலைவர்கள் முன்பே கூறி வந்தனர்.
ஆனால் முடிவுகள் எதிர்பார்ப்பை எட்டவில்லை. மதுராந்தகத்தில் மா.கம்யூ. 1,986 ஓட்டுகள் (1.07%) பெற்றது; தாராபுரத்தில் இ.கம்யூ. 1,157 ஓட்டுகள் (0.64%) மட்டுமே பெற்றது. இரு தொகுதிகளிலும் 2,000 ஓட்டுகளையும் தாண்ட முடியவில்லை.
இந்த நிலை கம்யூ. கட்சிகளை விட, த.வெ.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட சிறிய கட்சிகளை அதிகமாக அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தகவல். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை எதிர்பார்க்கும் இக்கட்சிகள், கம்யூ. ஓட்டுகளை சுட்டிக்காட்டி கூட்டணித் தலைமை கட்சிகள் ‘உங்களுக்கும் இதே அளவில்தான் ஓட்டு வங்கி’ என கூறி இடப் பங்கீட்டில் அழுத்தம் கொடுக்குமோ என்ற கவலையில் உள்ளன.
இ.கம்யூ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், கம்யூ.க்கு ஓட்டளிக்க நினைத்தவர்களும் த.வெ.க. ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதால் ஆளும் கட்சிக்கே ஓட்டளித்திருக்கலாம் என்றார். கம்யூ. பிரசாரம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது; தனித்து போட்டியிடும் போது அது ஓட்டுகளாக மாறாமல் போகலாம், ஆனால் கூட்டணியில் இருக்கும் போது வெற்றிக்கு உதவும் என்றும், இதை கூட்டணித் தலைமை கட்சிகள் புரிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.





