புதுடில்லி: காங்கிரஸில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அவரது சகோதரி லோக்சபா எம்.பி. பிரியங்கா காந்திக்கும் ஆலோசனை வழங்க தனித்தனி குழுக்கள் செயல்படுகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியுடன் பணியாற்றியவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த குழுக்களில் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த இடத்தில் இளைஞர்களை இருவரும் சேர்த்துள்ளதாகவும், குழுக்களில் உள்ள அனைவரும் 35 வயதுக்குள் உள்ளவர்களாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐ.ஐ.எம். போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் படித்த இளைஞர்கள் ராகுல், பிரியங்காவுக்கு உதவுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
இந்த மாற்றம் காரணமாக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்து அதிருப்தியில் இருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், “இளைஞர்கள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள்; வயதானோரை தள்ளிவிடுங்கள்” என்ற பொருளில் ராகுல் பேசியதாக கூறப்படும் கருத்தும் மூத்தோருக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த சமீபத்திய போராட்டத்திலும் இந்த புதிய ஆலோசக வட்டத்தின் பங்கு இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது. ஆகாஷ்வாணி பவனில் நுழைந்து மரத்தடியில் அமர்ந்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, அங்கிருந்து தேர்தல் கமிஷன் அலுவலகத்தின் பின்புறம் செல்ல வழி இருப்பதாக கூறி இளைஞர் குழு ஆலோசனை வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வகை மோதல் போக்கான செயல்பாடுகள் வன்முறையாக மாறக்கூடும் என்ற அச்சத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கவலைப்படுவதாகவும், ராகுலுக்கு இதை யார் எடுத்துச் சொல்வது என அவர்கள் நொந்து பேசுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.





