புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பல துறைகளிலும் வேகமாகப் பரவிவரும் நிலையில், அதை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா எச்சரித்துள்ளார்.

ஏஐ வழங்கும் முடிவுகள் தானாகவே சரியானவை என்ற மனப்பாங்கை நிறுவனங்கள் கைவிட வேண்டும் என அவர் கூறினார். மிக ஆற்றல் வாய்ந்த, மேம்பட்ட ஏஐ மாடல்களை பயன்படுத்தும் போது, தவறு நேர்ந்தால் உடனடியாக தலையிடக் கூடிய ‘எமர்ஜென்சி பிரேக்’ போன்ற கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

ஏஐ ஒரு பணியைச் செய்து கொண்டிருக்கும் போதே அபாயம் அல்லது பிழை தென்பட்டால், அதை நடுவிலேயே நிறுத்தவோ முடக்கவோ தகுதியான மனிதர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஏஐ மாடல்களை உருவாக்கும் நிறுவனங்கள் அளிக்கும் உறுதிமொழிகளை மட்டும் நம்பி விடக் கூடாது என்றார்.

எவ்வளவு மேம்பட்ட மாடலாக இருந்தாலும், அது பாதுகாப்பற்றதாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கலாம் என்ற அடிப்படையில் அணுகி, ஆரம்பத்திலிருந்தே கடுமையான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என நாதெல்லா கூறினார். நிறுவன ரகசியத் தகவல்களைத் திருடவோ தவறாகப் பயன்படுத்தவோ கூடிய உள்ளக ஊழியரைப் போலவே எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றும், மனித முடிவுகளை மாற்றி இறுதி அதிகாரமாக ஏஐ மாறக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ அளவுக்கு முன்னேறிய தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் மனிதர்கள் எளிதில் படித்து புரிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றார். ஏஐ ஆதிக்கம் அதிகரிக்கும் சூழலில், அவரது கருத்துகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன.