மும்பை: உணவு பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க ‘ஈட் ரைட்’ என்ற மக்கள் இயக்கத்தை விரைவில் தொடங்க உள்ளதாக மஹாராஷ்டிர உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் துக்காராம் முண்டே தெரிவித்தார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உணவு பாதுகாப்பை வெறும் அரசு ஒழுங்குமுறையாக மட்டும் பார்க்கக் கூடாது; அது தனிநபரின் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது என்றார். மக்கள் எதை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த இயக்கம் வடிவமைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பள்ளிகள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பான உணவு தேர்வுகளை செய்ய உதவும் நடைமுறை வழிகாட்டுதல்களும் இதில் இடம்பெறும் என்றார்.

வீடுகளிலும் அபாயங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஃப்ரிட்ஜில் உணவுப் பொருட்களை முறையாக பிரித்து வைக்காததால் மாசுபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதனால், சரியான முறையில் உணவை கையாள்வது குறித்து அடுத்த சில மாதங்களில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், தவறு நடந்தால் மக்கள் தைரியமாக குரல் எழுப்ப வேண்டும் என்றும், உணவகங்கள் மற்றும் கடைகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரடியாக கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் கடமை மட்டுமல்ல என கூறிய அவர், தன் அரசு பணியில் கவனம் செலுத்தி நிர்வாக நடைமுறைகளை முறைப்படுத்தி நிலைநிறுத்துவதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.