புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கக் கோரி படிவம்-7 மூலம் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெறும் நிலையில், ஆதாரமற்ற பெயர் நீக்கப் புகார்கள் உண்மையான வாக்காளர்களை பாதிக்கவும், தேர்தல் அதிகாரிகளின் பணிச்சுமையை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாகக் கூறி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
துணை செயலர் சந்தீப் குமார் அனுப்பிய வழிகாட்டுதல்களில், பெயர் சேர்ப்பு உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படும் காலத்தில் தனிநபர் படிவம்-7 விண்ணப்பங்களை குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் மாதத்திற்கு ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், இந்த வரம்புகள் இணையவழி மற்றும் நேரடி விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 1960 வாக்காளர் பதிவு விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளவர்களே படிவம்-7 மூலம் விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் கமிஷன் நினைவூட்டியுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பத்தையும் வாக்காளர் பதிவு அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும்; முழு விவரங்கள் இடம்பெற வேண்டும்; புகார் அளிப்பவரின் அசல் கையெழுத்து கட்டாயம்; பட்டியலுடன் ஒப்பிட்டு விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SIR காலத்தில் அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன் நாளொன்றுக்கு 50 விண்ணப்பங்களும், அதன் பின் நாளொன்றுக்கு 10 விண்ணப்பங்களும் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விதிகளின்படி சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிராகரிக்கவும், இறுதி முடிவுக்கு முன் புகார்தாரரிடம் நேரில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் பொய்யானது என தெரிய வந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950, பிரிவு 31ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.





