துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற பிளைதுபாய் விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில், புதிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்புத் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹம்மாம் அல் ஹம்மாமி தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரிகள் கூறுவதன்படி, ஹம்மாமிக்கு தீவிரவாத சாய்வு 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படித்த காலத்தில் உருவானதாகவும், அப்போது அவர் மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாத இயக்கங்களின் பக்கம் ஈர்க்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் 2001ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலைப் போன்ற தாக்குதலாக, இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதை குறைபாடின்றி செயல்படுத்த பலகட்ட முன்னேற்பாடுகளை செய்ததாகவும் விசாரணை கூறுகிறது.

அந்த முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, டெல் அவிவ் செல்லும் விமான வழித்தடங்கள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு நடைமுறைகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள, அவர் ஏற்கனவே இரண்டு முறை அந்த வழித்தடங்களில் பயணம் செய்து ஒத்திகை பார்த்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செப்டம்பர் 30 அன்று தாக்குதலை முயன்றபோது, ஸ்மிட் மச்சார் என குறிப்பிடப்பட்ட விமானியின் சாதுர்ய நடவடிக்கையால் அவர் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் துணை விமானியிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.