புதுடில்லி: அமெரிக்க படையினர் எப்-35 போர் விமானத்தின் அருகே கூட இந்திய அதிகாரிகளை அனுமதிக்கவில்லை; விமானத்தின் காக்பிட்டையும் காட்டவில்லை என்று இந்திய விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமெரிக்க விமானப் படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதை கூறினார். அணிவகுப்பு பறப்பில் பங்கேற்க அனுமதி இருந்தாலும், முக்கிய பகுதிகளுக்கான அணுகல் மறுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஐந்தாம் தலைமுறை எப்-35 விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முன்மொழிவையும் அல்லது சலுகையையும் வழங்கவில்லை என்று அவர் கூறினார். ரஷ்யா தனது ஐந்தாம் தலைமுறை எஸ்யு-57 விமானங்களை வழங்க முன்வந்துள்ளதையும், ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெனரல் ஷ்னைடர், எப்-35 விமானத்தில் வெளிநாட்டவர்களுக்கு எதை காட்டலாம், காட்டக்கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று கூறினார்.





