சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து பேசும் போது, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மாநிலங்கள் வலிமையானால் நாடும் வலிமையாகும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் உற்பத்தித் துறையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருவதாகவும், தமிழகத்தின் உற்பத்தித் துறை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மீது நாடு பெருமிதம் கொள்கிறது எனவும் குறிப்பிட்டார். “மேக் இன் இந்தியா” மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு போன்ற திட்டங்கள் தமிழகத்திற்கு பயன் தரும் என்றும் அவர் கூறினார்.

2014க்கு பிறகு இந்தியா உலகின் மொபைல் போன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மின்னணு உற்பத்தி ஏற்றுமதி 16 மடங்கும், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி 50 மடங்கும் உயர்ந்ததாகவும், பொறியியல் ஏற்றுமதியும் சாதனை படைத்ததாகவும் அவர் கூறினார். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவானதாகவும், இதில் தமிழகத்தின் பங்களிப்பும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கப்பல் கட்டுமானத்தின் உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் கூறினார். தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ரூ.17 ஆயிரம் கோடி முதலீட்டில் உலகத் தரமான மெகா கன்டெய்னர் மற்றும் பசுமை எரிசக்தி மையமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பிரதமர் மீன்வளத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னை மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்குதல், தமிழகத்தில் கடற்பாசி மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசு உதவி செய்வதாகவும், விவசாயிகள் கடன் அட்டை போல மீனவர்களுக்கும் எளிதாக கிடைக்கச் செய்யப்படுவதாகவும் கூறினார். கடந்த ஆண்டில் கடல்சார் ஏற்றுமதி உயர்ந்ததால் மீனவர்களின் வாழ்க்கை மேலும் மேம்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.