அக்டோபர் 11 அன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

இந்த வருகையின் முக்கிய அம்சமாக, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி–வடபழனி இடையிலான 15 கி.மீ. வழித்தடத்தில் மெட்ரோ சேவை தொடங்கப்படுகிறது. புதிய வழித்தடத்தில் பிரதமர் பயணம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது; அவருடன் முதல்வர் விஜயும் பயணம் செய்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில், 10-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிறுவுநர்களை சந்தித்து பிரதமர் கலந்துரையாடுகிறார். தெற்கு ரயில்வேயில் ரூ.750 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.

பின்னர், இசைஞானி இளையராஜா இசைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, நிறைவடைந்த சாலைப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

மேலும், ரூ.4,900 கோடியில் அமைக்கப்பட்ட பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தில் உள்ள 11 மெட்ரோ நிலையங்களும் திறக்கப்படுகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.482 கோடி மதிப்பிலான நிலக்கரி கையாளும் மற்றும் பொது சரக்கு கையாளும் கப்பல் தள தரம் உயர்த்தல் உள்ளிட்ட பணிகளும் தொடங்கப்படுகின்றன. மணலியில் உள்ள சி.பி.சி.எல். சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் ரூ.1,600 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் ‘லூப் ஆயில்’ தயாரிப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. மாலையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.