சென்னையில் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பூந்தமல்லி–வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்த இந்த வழித்தடம் சுமார் 15 கி.மீ. நீளமாக உள்ளது.
டில்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்த பிரதமரை முதல்வர் விஜய் நேரில் வரவேற்றார். பின்னர் சென்னை விமான நிலையம் அருகே பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்; சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், முதல்வர் விஜயுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். பயணத்தின் போது திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளிக்க, அவர் கேட்டறிந்தார். நினைவுப் பரிசாக முதல்வர் விஜய் மெட்ரோ ரயில் மினியேச்சரை வழங்கினார்.
அட்டவணைப்படி, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவும், தெற்கு ரயில்வேயின் ரூ.750 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து, ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
அதேபோல், ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்ட பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தில் உள்ள 11 மெட்ரோ நிலையங்களையும் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.482 கோடி மதிப்பிலான துறைமுக மேம்பாட்டு பணிகள் மற்றும் மணலியில் உள்ள சி.பி.சி.எல். சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் ரூ.1,600 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் ‘லூப் ஆயில்’ தயாரிப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டி, மாலையில் பள்ளி பொன் விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.





