சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற “மாணவர்களின் குரல்” என்ற நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்; கேள்வி கேட்பது அரசியலமைப்பு வழங்கிய உரிமை” என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழக மக்கள்மீது ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது என்றும், தமிழ் மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவை இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கான ரூ.3,500 கோடியை விடுவிப்போம் என மத்திய அரசு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வால் தமிழ் மாணவர்களின் எம்பிபிஎஸ் இடங்களில் 87% வெளிமாநிலத்தவர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், மாநில பல்கலைகளில் 70% இடங்களில் துணைவேந்தர் இல்லாததற்கு கவர்னரே காரணம் என்றும், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் பல்கலைகளை நடத்த முயற்சி இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

தொகுதி மறுவரையறை மூலம் தமிழக பிரதிநிதித்துவத்தை குறைத்து மாநிலத்தின் குரலை ஒடுக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் கூறினார். டில்லியில் நகரம் முடக்கப்பட்டதாகவும், இணையசேவை துண்டிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதாகவும் கூறிய அவர், பிரதமர் மோடி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் சீரழிக்கிறார் என குற்றம்சாட்டினார்.

தமிழ் கலாசாரத்தின் மீது தாக்குதலை அனுமதிக்க மாட்டோம் என்றும், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் தாக்குவதற்கு யாரையும் விடமாட்டோம் என்றும் கூறிய ராகுல், மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.