புதுடில்லியில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்) மற்றும் தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோருக்கு எதிராக இண்டி கூட்டணி கட்சியினரும் மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் 124 பேர் பொதுமக்களுக்கு கடிதம் எழுதி தேர்தல் தலைமை ஆணையருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தாங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்றும், ஆதாரமின்றி தேர்தல் நடைமுறையை மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டுவது ஜனநாயக அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னைய கால அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர்கள், முறைகேடு நிறைந்த தேர்தல்கள் எப்படி இருக்கும் என்பது தங்களுக்கு தெரியும் என்றும், 1990களில் ஓட்டுச்சாவடி கைப்பற்றல் மற்றும் கள்ள ஓட்டு போன்றவை சாதாரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் நிர்வாகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்திய அவர்கள், 2025ல் பீஹாரில் அமைதியாக தேர்தல் முடிந்ததை எடுத்துக்காட்டினர். மறு தேர்தல் எதுவும் நடக்காதது, 1951க்குப் பிறகு அதிகளவு ஓட்டுப்பதிவு, பெண்கள் அதிகளவில் போட்டியிட்டது போன்றவை முன்னேற்றத்தின் அடையாளங்கள் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் ஆணைய அமைப்பு பாதுகாப்பானது; அதை எளிதில் துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இப்போது போராட்டம் நடத்தும் கட்சிகள் வெற்றி பெற்ற போதும் இதே தேர்தல் முறைதான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்களிடையே செல்வாக்கை நிலைநிறுத்தவே இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.





